இந்தியாவில் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்றாக விப்ரோ நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் விப்ரோ நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அந்நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மும்பை பங்கு சந்தைக்கு அசிம் பிரேம்ஜி அனுப்பியுள்ள அறிக்கையில் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஓய்வு பெறுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. விப்ரோ தலைவருக்கு தற்போது 53 வயதாகிறது. குஜராத் மாநிலத்தில் பிறந்த அசிம் பிரேம்ஜி, உலகின் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களுள் ஒன்றாக விப்ரோ நிறுவனத்தை உருவாக்கியவர்.
இவரின் தொழில் துறையின் திறமையை பாராட்டி இந்திய அரசு 2005 ஆம் ஆண்டு, பத்மபூஷண் விருதும், 2011 ஆம் ஆண்டு பத்மவிபூஷண் விருதும் வழங்கி கவுரவப்படுத்தியது. இது தவிர இந்திய மற்றும் வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளன. வணிகத்துறையில் சிறந்து விளங்கியதற்காக எக்னாமிக் டைம்ஸ் உள்ளிட்ட வணிகம் சார்ந்த நாளிதழ்கள் இவருக்கு விருதுகளை வழங்கியுள்ளன. அமெரிக்காவில் உள்ள பங்கு சந்தையில் இந்தியா சார்பில் முதன் முறையாக கால் பதித்தவர். உலக பணக்காரர்கள் வரிசையில் அசிம் பிரேம்ஜியும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2001 ஆம் ஆண்டு தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி நாடு முழுவதும் உள்ள ஆரம்பப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டார். விப்ரோ நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து அசிம் பிரேம்ஜி ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து நிர்வாக குழு இயக்குனர்களில் ஒருவராகவும், நிறுவனராகவும் இருப்பார் என்று விப்ரோ நிறுவனம் கூறியுள்ளது. அசிம் பிரேம்ஜி ஓய்வு பெறுவதை அடுத்து ஜூன் 31-ம் தேதி முதல், அவரது மகன் ரிஷாத் பிரேம்ஜி விப்ரோவின் தலைவர் பதவியை வகிப்பார் என்றும், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அபிதாலி நீமுச்வாலா நிர்வாக இயக்குனர் பொறுப்பை ஏற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.