கேரளாவின் மூணாறு பகுதியிலுள்ள மாட்டுப் பெட்டி அணைப் பகுதியின் சாலையோர கடைகளை, வனப் பகுதியிலிருந்து வந்த ஆண் யானை ஒன்று சூறையாடியது.
கேரளாவின் மூணாறு இடுக்கி பகுதிகள் சுற்றுலாத்தலம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகமிருக்கும். அதன் காரணமாகவே சாலையோரம் பழக்கடைகள், இளநீர் விற்பனை கடைகள் பரவலாகவே காணப்படும். மூணாறு பகுதியின் பிரம்மாண்டமான காட்டுயானை ஒன்று அடிக்கடி ஊருக்குள் வந்து அட்டகாசம் பண்ணிவிட்டுச் செல்வது வழக்கம். பார்ப்பதற்கு அம்சமாகத் திகழும் அந்த யானையை அப்பகுதி மக்கள் படையப்பா என்று பாசத்தோடு அழைப்பர்.
நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மூணாறின் எக்கோ பாயிண்ட் பகுதியில் காட்டிலிருந்து வெளியே வந்த படையப்பா, சாலையோரங்களிலிருந்த கடைகளைப் பதம் பார்த்தது அங்கே கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அன்னாசி பழம், கேரட், சோளம் உள்ளிட்ட பொருட்களைத் தின்ற பின்பு நேற்று காலை 7 மணிக்கு தான் காட்டுக்குள் சென்றது. சுற்றுலாவுக்காக வந்த பயணிகள் இதைப் பார்த்து ரசித்தாலும் மற்றொருபுறம் அவர்களுக்கு அச்சம்.
பின்னர் மீண்டும் அதே பாயிண்ட்டிற்கு வந்த படையப்பா, சாலை பகுதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இளநீர் காய்களை தரையில் மிதித்து உடைத்து சாப்பிடுகிற வீடியா கேரளாவின் சமூக வலை தளங்களில் வைரலோ வைரல். இந்தச் சூழலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வேறு அடை போன்று மொய்க்க, வனத்துறையினரோ படையப்பா யானையை காட்டுக்குள் திருப்பிய அனுப்ப இரண்டு மணி நேரம் போராட வேண்டியதாயிற்று.
மீண்டும் படையப்பாவின் அதிரடி ஆட்டம் எப்போது. திக் திக் மனப் பதட்டத்திலிருக்கிறது மூணாறு.