மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி இருந்து வரும் நிலையில், கட்சியின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேசிய மாநாடு ஏப்ரல் மாதத்தில் கேரளாவின் கண்ணூரில் நடைபெறவுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிப்படி சீதாராம் யெச்சூரியே மேலும் மூன்று வருடங்களுக்குப் பொதுச்செயலாளராகத் தொடரலாம் என்றாலும், கேரள முதல்வர் பினராயி விஜயன் பொதுச்செயலாளர் பதவிக்கு குறிவைப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேற்குவங்கத்திலும், திரிபுராவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியில் உள்ளது. இதனால் கட்சிக்குள் பினராயி விஜயன் செல்வாக்கு மிக்க நபராக இருந்து வருவது கவனிக்கத்தக்கது.
2016 ஆம் ஆண்டு கேரளாவின் முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்றதிலிருந்து, அவர் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தனது கைக்குள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பையேற்ற பினராயி விஜயனுக்குப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுமா என ஒரு பக்கம் கேள்வியெழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.