புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள ‘டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி, பல தடைகளைக் கடந்து டெல்லி சென்றடைந்தது. டெல்லியின், புராரி பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து 26 -ஆவது நாளாக, விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று முதல் விவசாயிகள் தொடர் 'சங்கிலித் தொடர்' உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.
இந்தநிலையில், மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் குறித்து விவாதிக்க சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கேரள அரசு கூட்டவுள்ளது. இதுகுறித்து, கேரள மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "டிசம்பர் 23 ஆம் தேதி சட்டசபையின் சிறப்பு அமர்வைக் கூட்ட ஆளுநருக்குப் பரிந்துரைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்திவரும் மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க, இந்த அமர்வு அழைக்கப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஒரு ட்வீட்டில், விவசாயிகளின் போராட்டத்தில் கேரளா இணைந்து நிற்பதாவும், இந்தச் சிறப்பு அமர்வு விவாதித்து வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் எனவும் கூறியுள்ளார். எனவே, கேரள அரசு கூட்டவுள்ள இந்தச் சிறப்பு அமர்வில், வேளாண் சட்டங்களை நிராகரித்து தீர்மானம் இயற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டெல்லி மாநில அரசு, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.