Skip to main content

மத்திய அரசுக்கு நியூஸ் க்ளிக் கண்டனம்

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

News Click Condemns Central Govt

 

சீனாவுக்கு ஆதரவாகவும் இந்திய அரசுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய அமெரிக்க கோடீஸ்வரர் நெவில் ராய் சிங்கம் என்பவரிடம் இருந்து பணம் பெற்றதாகப் புகார் எழுந்ததால், டெல்லியில் உள்ள நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்திற்குத் தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் அலுவலக நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களிலும் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது பத்திரிகையாளர்களிடம் இருந்து மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்த புகார் தொடர்பாகச் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (உபா சட்டம் - UAPA) கீழ் நியூஸ் கிளிக்கிற்கு எதிராக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நேற்று மாலை டெல்லி போலீசார் சீல் வைத்திருந்தனர். மேலும் நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தாவை டெல்லி போலீசார் சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர். இவருடன் நியூஸ் க்ளிக் ஊடகத்தைச் சேர்ந்த நிர்வாகி அமித் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

 

இதனைத் தொடர்ந்து இருவரும் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கைது செய்யப்பட்ட பிரபீர் புர்கயஸ்தா, அமித் ஆகியோருக்கு 7 நாள் போலீஸ் காவல் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் நியூஸ் கிளிக் ஊடக நிறுவனர் புர்கயஸ்தா, “சீனாவின் உத்தரவின் பேரில் எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை. தங்களது இணையதளம் சுதந்திரமானது. சீன பிரச்சாரத்தை தங்கள் இணையதளத்தில் பரப்பவில்லை. நீதிமன்றங்கள், நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

 

News Click Condemns Central Govt

 

இந்நிலையில் நியூஸ் க்ளிக் நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “தாங்கள் செய்த குற்றம் என்ன என்று கூறாமலேயே ஆசிரியர், நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை முதல் தகவல் அறிக்கை கூட வழங்கப்படவில்லை. டெல்லி சிறப்புப் போலீசின் சிறப்புப் பிரிவு, தங்கள் நிறுவனத்தில் சோதனை நடத்தியதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். உரிய நடைமுறைகளைக் கடைப்பிடிக்காமல் சோதனை நடத்தியுள்ளனர். செய்தியாளர்களின் சுதந்திரத்தை மதிக்காத அரசின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

மத்திய அரசு மீதான விமர்சனத்தை தேச விரோதச் செயல் என்று தவறாக மத்திய அரசு பிரச்சாரம் செய்கிறது. எனவே மத்திய அரசுக்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்தே நியூஸ் கிளிக் செய்தி ஊடகத்தை மத்திய அரசு குறிவைத்து நடத்தியுள்ளது. ஏற்கனவே பலமுறை நியூஸ் க்ளிக் அலுவலகத்தில் இருந்த செய்தி ஊடக கருவிகளை அரசு பறிமுதல் செய்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகச் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை ஏற்கனவே நியூஸ் க்ளிக் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்