தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்தவர் ஹனிப் ஷேக் (47). இவர், ‘சிமி’ என்கிற இயக்கத்தில் சேர்ந்து பல இளைஞர்களை மூளைச்சலவை செய்தும், இயக்க செயல்பாடுகளுக்காக நன்கொடை திரட்டும் பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அதன் பிறகு, இவர் கடந்த 2001ஆம் ஆண்டு, அந்த இயக்க பத்திரிகையின் ஆசிரியராகவும் வேலை பார்த்து வந்துள்ளார்.
அந்த சமயத்தில், டெல்லியில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனி போலீஸ் நிலையத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், ஹனிப் ஷேக் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு, தலைமறைவாக இருந்து வந்த ஹனிப் ஷேக்கை, கடந்த 2002ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம், அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தது.
ஹனிப் ஷேக்கை பற்றி தகவல்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் ஆதரவாளர்களை பற்றி தகவல்களை சேகரிக்க டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு ஒரு குழுவை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், ஜல்காவ் மாவட்டம் புசாவல் நகர் பகுதியில் போலீஸ் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, காகா ரோடு வழியாக காரில் ஹனிப் ஷேக்கை அடையாளம் கண்டு போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் அதிர்ச்சியடைந்த ஹனிப் ஷேக் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே சுதாரித்த போலீசார், ஹனிப் ஷேக்கை விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஹனிப் ஷேக்கிடம் நடத்திய விசாரணையில், ஹனிப் ஷேக் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு, புசாவல் நகரில் உள்ள ஒரு உருது பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஹனிப் ஷேக்கிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.