ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தது உலக அளவில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க இந்திய ரயில்வே பரிந்துரைத்திருந்தது. அதன்படி நேற்று மாலை சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கினர். அந்தப் பகுதியில் உள்ள ரயில்வே ஊழியர்கள், ரயில்வே அதிகாரிகள் உட்பட அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் தவறான சிக்னல் முக்கியக் காரணியாக இருக்கிறது. செய்தியாளர்களைச் சந்தித்திருந்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 'இண்டெர்லாக்கிங் சிக்னல் சிஸ்டம் மிகவும் நம்பகமானது' என தெரிவித்திருந்தார். ஆனால் இந்த சிஸ்டத்தில் ஒரு சிக்னல் பழுதானால் அனைத்து சிக்னல்களும் சிவப்பு நிறமாக மாறி அனைத்து ரயில்களையும் நிறுத்தி விடும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திட்டமிட்ட இடையூறு இல்லாமல் மெயின் லைனுக்கான பாதையை லூப் லைனுக்கு மாற்றுவது சாத்தியம் இல்லாத ஒன்று எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் சிக்னலில் குறுக்கிட்டது யார் என்பது தொடர்பான விசாரணையில் சிபிஐ மும்முரம் காட்டிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.