சோசியல் மீடியா காலத்தில் நாளுக்கு நாள் விநோதம், ட்ரெண்ட் என புது விஷயங்கள் நிகழ்ந்து வைரலாகி வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் மருத்துவமனையில் உள்ள அறுவைசிகிச்சை அரங்கத்தில் மருத்துவரும், அறுவை சிகிச்சை செய்துகொண்ட மாணவி ஒருவரும் தமிழ்ப் பாடலான 'மலரே மௌனமா' என்ற எஸ்பிபியின் பாடலை பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் பரோக் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் முகமது ரயீஸ், 14 வயதான சிறுமி ஒருவருக்கு காலில் எலும்பு அறுவை சிகிச்சை செய்துள்ளார். அறுவைசிகிச்சை செய்துகொண்டிருந்த அந்த மருத்துவர் அந்த சிறுமியிடம் வலி உள்ளதா எனக்கேட்டுள்ளார். அதற்குச் சிறுமி 'ஆம்' எனத் தலையாட்ட மருத்துவர் வலியை மறக்க வைக்க 'மலரே மௌனமா...' எனப் பாட ஆரம்பித்தார். அந்த சிறுமியும் அவருக்கு இணையாகப் பாடினார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.