இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களில், தினசரி கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த, தடுப்பூசி திருவிழா நடத்துமாறு பிரதமர் மோடி மாநில முதல்வர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்தநிலையில், ஏற்கனவே இந்தியாவில், கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இருக்கும் நிலையில், மூன்றாவது தடுப்பூசிக்கு இன்று (12.04.2021) அனுமதி கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியான ‘ஸ்புட்னிக் V’ (sputnik 5) என்ற தடுப்பூசியை இந்திய நிபுணர் குழு இன்று ஆராய உள்ளதாகவும், அதற்கு இன்று அவரச கால அனுமதி கிடைத்துவிடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குள், இந்தியாவில் மேலும் ஐந்து தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன், அமெரிக்க நோவாவக்ஸ் நிறுவனம் இந்தியாவின் சீரம் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் தடுப்பூசி, பாரத் பயோ-டெக் நிறுவனத்தின் ‘இன்ட்ரானசல்’ தடுப்பூசி உள்ளிட்டவை அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.