இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த மூன்றாவது அலை குழந்தைகளை அதிகளவு பாதிக்கும் என்ற ஒரு கருத்தும் நிலவிவருகிறது. இந்நிலையில், குழந்தைகளிடம் பரவும் கரோனாவின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும் அவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் குறித்தும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக நிதி ஆயோக்கின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே பால் பேசுகையில், "குழந்தை பருவத்தினரிடையே பரவும் கரோனா நமது கவனத்தை ஈர்த்து வருகிறது. குழந்தைகளுக்கு பொதுவாக அறிகுறிகள் ஏற்படாது. ஆனாலும் அவர்களுக்குத் தொற்று ஏற்படுகிறது. இருப்பினும் அவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் குறைவானவையாக உள்ளன அல்லது அறிகுறிகளே இல்லை. குழந்தைகளிடத்தில் கரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், குழந்தைகளிடம் தனது தன்மையை வைரஸ் மாற்றக்கூடும். கரோனாவின் தாக்கம் குழந்தைகளில் அதிகரிக்கலாம். ஆனால், இப்போதைக்குக் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகள் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாகத் தரவுகள் காட்டுகிறது. நாங்கள் தயார் நிலையை ஏற்படுத்தி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், "கரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. சமீபத்தில் கரோனாவிலிருந்து குணமான குழந்தைகளுக்கு உடலில் வீக்கங்கள் ஏற்படுகிறது" எனவும் தெரிவித்தார்.