
லாரி விபத்தில் உயிரிழந்த பெண் ஒருவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு உயிருடன் திரும்பி வந்ததாக கிராம மக்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் மன்சோர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் லலிதா பாய். இரண்டு குழந்தைகளுக்கு தாயான லலிதா பாய் கடந்த 2023 ஆம் ஆண்டு திடீரென காணாமல் போனதாக அவர் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரையடுத்து பல இடங்களில் போலீசார் லலிதா பாயை தேடி வந்தனர். அதே பகுதியில் லாரி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தது குறித்து லலிதா பாயின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
லலிதா பாயின் குடும்பத்தினரிடம் உடல் காட்டப்பட்ட நிலையில் சடலத்தின் கையில் இருந்த டாட்டூ மற்றும் அவர் காலில் கட்டி இருந்த கருப்பு நிற கயிறு ஆகியவற்றை அடையாளமாகக் கொண்டு இது லலிதா தான் என அவரது குடும்பத்தினர் உறுதிப்பட தெரிவித்தனர். இதனால் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடலுக்கு குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தி தகனம் செய்தனர். இந்த சம்பவத்தில் ஷாருக், சோனு, இஜாஸ், இம்ரான் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் 2023 ஆம் ஆண்டு நடந்திருந்த நிலையில் உயிரிழந்ததாக நினைக்கப்பட்ட லலிதா பாய் திடீரென வீட்டிற்கு உயிருடன் வந்துள்ளார். இதனைக் கண்டு வீட்டில் இருந்தவர்கள் மட்டுமல்லாது கிராமமே அதிர்ச்சியில் உறைந்தது. லலிதாவை உடனடியாக அழைத்துக் கொண்டு காந்தி சாகர் காவல் நிலையத்திற்கு அவரது குடும்பத்தினர் சென்றனர். தன்னுடைய மகள் இறந்ததாக நினைத்திருந்தோம் ஆனால் அவர் உயிருடன் வந்துவிட்டார் என காவல் நிலையத்தில் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
போலீசாரும் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஷாருக் என்பவர் தன்னை அழைத்துச் சென்று தன்னை ஒருவருக்கு 5 லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டதாகவும், அவர்களது பிடியிலிருந்து தற்போது தான் தப்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இறந்ததாகக் கூறப்பட்ட பெண் திரும்ப வந்தாலும் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அறிவியல் பூர்வமான சோதனைகள் நடந்த பிறகு அவர் உண்மையில் லலிதா பாயா அல்லது வேறு பெண்ணா என்பது தெரியவரும் என்கின்றனர். உண்மையாகவே இவர் காணாமல் போன லலிதா பாய் என்றால் லாரி விபத்தில் இறந்தவர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.