ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. சனிக்கிழமை முதல் கட்ட தேர்தல் துவங்கியது. நக்சல்கள் நிறைந்த மாநிலம் என்பதால் அந்த மாநிலத்தில் பாதுகாப்பு கருதி ஐந்து கட்டமாக தேர்தல் நடக்கிறது. அடுத்த கட்ட தேர்தல்கள் இம்மாதம் 7, 12, 16, 20 ஆகிய தேதிகளில் நடக்கிறது. முக்கிய கட்சிகளாக பாஜக, காங்கிரஸ் இரண்டும் இந்த தேர்தலுக்கு முக்கியத்துவம் அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மாநிலத்திலும் விவசாயிகளின் பிரச்சனை முக்கியத்துவம் பெறுகிறது.
இன்று சிம்டேகா என்ற இடத்தில் காங்கிரஸ் பேரணி நடந்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, ''எங்கெல்லாம் பாஜக ஆட்சி நடக்கிறதோ அங்கு, முதலாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நிலங்கள் அவர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. ஆனால், விவசாயிகளுக்கு என்ன வேண்டுமோ அவை கிடைப்பதில்லை. இது ஒன்றும் மோடி சர்கார் கிடையாது. இது அதானி - அம்பானி சர்கார். பாஜக மதம், ஜாதி ரீதியாக தாக்குதல் நடத்தி நாட்டை வழி நடத்தி செல்கிறது. எப்போது எல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வருகிறோமோ அப்போது விவசாயிகளுக்கு நல்லது செய்வோம். விவசாயிகளின் கடனை ரத்து செய்வோம். நாங்கள் வெற்றி பெற்றால் விவசாயிகளின் கடனை ரத்து செய்வோம்'' என்றார்.