வாட்ஸ்அப் நிறுவனம் இந்த வருட தொடக்கத்தில், தனது சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. இதற்கு வாட்ஸ்அப் பயனர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து வாட்ஸ்அப் பயனர்கள் டெலிகிராம், சிக்னல் போன்ற வேறு செயலிகளுக்கு மாறத் தொடங்கினர்.
இதனால் வாட்ஸ்அப், தனது சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் கொண்டுவந்த மாற்றத்தை அமல்படுத்துவதை மே 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது. இதன் தொடர்ச்சியாக மாற்றப்பட்ட வாட்ஸ்அப்பின் சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகள் கடந்த மே 15ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்தன.
இதனையடுத்து வாட்ஸ்அப், அதன் தனியுரிமை கொள்கைகளில் கொண்டுவந்துள்ள மாற்றத்தைத் திரும்பப் பெறவோ, அல்லது அந்த மாற்றங்களைப் பயனர்கள் ஏற்காமல் இருப்பதற்கு வாய்ப்பளிக்கவோ அந்த நிறுவனத்துக்கு உத்தரவிட மத்திய அரசை அறிவுறுத்தும்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்தநிலையில், மத்திய அரசு இந்த வழக்கில் பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், "புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை கொள்கைகளுக்குப் பயனர்களிடமிருந்து தந்திரமாக ஒப்புதல் பெறுவதன் மூலம் வாட்ஸ்அப், பயனர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது" என மத்திய அரசு வாட்ஸ்அப்பை குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் மத்திய அரசு அதன் பிரமாண பாத்திரத்தில், "வாட்ஸ்அப் அதன் டிஜிட்டல் வலிமையை தற்போதுள்ள பயனர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. தனிப்பட்ட தரவு பாதுகாப்பு (பி.டி.பி) மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, வாட்ஸ்அப் தற்போதுள்ள பயனர்களைப் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை கொள்கையை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தும்" எனவும் கூறியுள்ளது.