புதுச்சேரி அரசு துறைகளில் பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் முறையாக பராமரிக்காததால் பழுதாகி, பயனற்று அந்தந்த துறை வளாகத்திலும் ஆண்டு கணக்கில் பலவாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி காவல்துறையில் 189 வாகனங்கள், வேளாண்துறையில் 188 வாகனங்கள், பாசிக்கில் 47 வாகனங்கள், தீயணைப்புத்துறையில் 6 வாகனங்கள் என இந்த 4 துறைகளில் மட்டும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 426 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக ஒரு வாகனம் சிறிது பழுதாகும் போது அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதின் விளைவுதான் 426 வாகனங்கள் பழுதாகி, பயனற்றுவிட்டது. இந்த வாகனங்கள் பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல என தெரியவந்த பிறகு இந்த வாகனங்களை உரிய காலத்தில் ஏலம் விட நடவடிக்கை எடுக்காததால் பல கோடி மதிப்புள்ள அரசு வாகனங்கள் மக்கி மண்ணாகி அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் புதியதாக சொகுசு கார்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதுபோல், வாகனங்களை உரிய நேரத்தில் பழுதுநீக்க நடவடிக்கை எடுத்திருந்தால் பல வாகனங்கள் பயன்பாட்டிலேயே இருந்திருக்கும். மேலே குறிப்பிட்டுள்ள துறைகள் தவிர்த்து, பொதுப்பணித்துறை, நலவழித்துறை, மின்துறைகள் உட்பட புதுச்சேரியில் உள்ள சுமார் 46 துறைகளிலும் இதுபோன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை கணக்கெடுத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்கும்.
இதுதொடர்பாக தகவல்பெறும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்களை சமூக ஆர்வலர் ரகுபதி பெற்றுள்ளார். இதனை ஆதாரமாக கொண்டு துணைநிலை ஆளுநருக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் அவர் மனு அளித்துள்ளார். அதில், 'புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் இதுபோன்று பயனற்று, பழுதாகி உள்ள வாகனங்களை உரிய காலத்தில் ஏலம் விட நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துறைகளின் வாகன பயன்பாட்டை வெகுவாக குறைப்பதற்கும், புதிய வாகனங்கள் வாங்குவதற்கு கடும் விதிமுறைகளை வகுத்தளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.