கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாஸ்தாம் கோட்டையைச் சேர்ந்தவர் 44 வயது பெண் ஒருவர். இவருக்கு கடந்த 12 ஆண்டுகளாக மூச்சுத் திணறல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இந்தப் பாதிப்புக்கு அந்தப் பெண் பல்வேறு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். ஆனால் தொடர்ந்து மூச்சுத்திணறல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில்தான் மூச்சு திணறல் பாதிப்பு அதிகமாக அந்தப் பெண் சிகிச்சைக்காக கொல்லத்தில் உள்ள வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரலில் சிறிய பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதனை அறுவை சிகிச்சை செய்து எடுப்பதற்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரலில் தங்க மூக்குத்தியின் ஒரு பாகம் சிக்கியிருப்பதை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து ரிஜிட் பிராங்கோஸ்கோப்பி என்ற அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் மூக்குத்தியின் சிறிய பாகத்தை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அந்தப் பெண் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வருடங்களுக்கு முன் தனது மூக்கியின் ஒரு பாகம் உடைந்ததாகவும், பின்பு எங்கு தேடியும் கிடக்கவில்லை; ஆனால் தற்போது என் நுரையிரலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அந்தப் பெண் தெரிவித்துள்ளார். தூங்கும் போது மூக்கித்தி உடைந்து வாய்வழியாக நுரையிரலுக்குச் சென்றிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.