ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது வழக்கம். இந்த வருடம் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்கள் பலர் சன்னிதானம் செல்லாமலேயே பாதி வழியில் திரும்பி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில் நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்தபடி கோவிலுக்கு சென்று வருகின்றனர். நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 85 ஆயிரம் பேர் தரிசனம் செய்து வரும் நிலையில், நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வாகனங்களில் வரும் பக்தர்கள் எரிமேலி உள்ளிட்ட சில பகுதிகளில் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தேவஸ்தானம் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்க வேண்டும் என முடிவு செய்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை இருப்பதால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் காவலர்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்கும் படி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டும் தேவஸ்தானம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்ய நீண்ட நேரம் ஆகும் என்பதால் பலர் சன்னிதானத்திற்கு செல்லாமலேயே மற்ற இடங்களில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு திரும்பி வருகின்றனர்.
தொடர்ந்து கூட்டம் அதிகரிப்பதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். அதேநேரம் பம்பைக்கு வாகனம் மூலம் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி ஐயப்பன் பக்தர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் பம்பைக்கு வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு கேரள போலீசார் தடை விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எரிமேலி நிலையம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிக்கணக்கில் அங்கே பக்தர்கள் காத்திருக்கும் வீடியோ காட்சிகளும், பேருந்தில் ஆபத்தான முறையில் இடம் பிடிக்கும் காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.