தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராக சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எந்தவித முன் அனுபவமும் இல்லாத ஆனந்த் சுப்ரமணியம் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமித்தது, பங்குச்சந்தை விவரங்களை முன்கூட்டியே ஏஜெண்டுகளுக்கு கசிய விட்டது என அவர் மீது பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்ட நிலையில் சித்ரா ராமகிருஷ்ணாவை டெல்லியில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இவ்வழக்கில் ஏற்கனவே கைதுசெய்யப்படலாம் என அறிந்த அவர் முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தியபோது அவர் உரிய பதில்களை அளிக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. உளவியல் வல்லுநர்கள் மூலமாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட போதிலும் அவர் முன்னுக்குப் பின்னான பதில்களை அளித்ததாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.