சமூகத்தில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்படுபவர்கள் பலர், அங்கு மறுவாழ்வைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றனர். அந்தவகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் முழுக்க முழுக்க சிறைவாசிகளால் நடத்தப்படும் வானொலி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமதுநகர் சிறைச்சாலையில்தான் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறைவாசிகளுக்காக, சிறைவாசிகளே நடத்தும் இந்த வானொலி நிலையம் மறுவாழ்வு மற்றும் சீர்திருத்தம் போன்ற ஒப்பற்ற நோக்கங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளர் சாவந்த் பேசுகையில், ‘இந்த வானொலி நிலையம் சிறைவாசிகளுக்காக சிறைவாசிகளே நடத்தப்பட உள்ளது. பாடல் கோரிக்கைகள், உடல்நலன் மற்றும் தெய்வீகம் போன்ற பலவிதமான நிகழ்ச்சிகள் இந்த வானொலி நிலையத்தில் இடம்பெறவுள்ளன’ என தெரிவித்துள்ளார்.
எதிர்மறையான எண்ணங்களில் இருந்து சிறைவாசிகளை நல்வழிப்படுத்தவே இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளோம் என மூத்த ஜெய்லர் ஷாம்காந்த் தெரிவித்திருக்கிறார். இந்த வானொலி நிலையத்தில் ஒலிபரப்பாகும் பாடல்களைக் கேட்க சிறையில் ஆங்காங்கே ஒலிபெருக்கிகளும் பொருத்தப்பட்டுள்ளன.