கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி ஏற்பட்டுள்ள விபத்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரயில்கள் மோதிய இந்த விபத்தில் ஏழுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் உள்ளே சிக்கி உள்ளனர். இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றும் தொடர்கிறது.
தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ரயில்வே அதிகாரிகள் நடத்திய முக்கிய விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. தவறான சிக்னல் கொடுத்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளி வந்துள்ளது.
மெயின் லைனுக்கு செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பச்சை சிக்னல் ரத்தானதால் லூப் லைனில் சென்று சரக்கு ரயில் மீது மோதியது. லூப் லைனில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது வேகமாக வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதால் பெட்டிகள் தடம் புரண்டன. சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பச்சை சிக்னல் கொடுத்துவிட்டு உடனடியாக அதை ரத்து செய்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.