மேற்கு வங்கத்தின் நாரதா இணையதளம், கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு புலனாய்வு நடவடிக்கையை நடத்தியது. அந்த நடவடிக்கையில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ, கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க தேர்தலுக்கு முன்பு வெளியானது. அந்த வீடியோவில், சில திரிணாமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு ஆதரவாகச் செயல்பட லஞ்சம் வாங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்தக் காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், அதையும் மீறி திரிணாமூல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதன்பிறகு இந்த வீடியோத் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகிறது. இந்த வழக்கு நாரதா வழக்கு என அழைக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் நாரதா வழக்கு தொடர்பாக தற்போது அமைச்சர்களாக இருக்கும் பிர்ஹத் ஹக்கீம், சுப்ரஜா முகர்ஜி, எம்.எல்.ஏ.வாக இருக்கும் மதன் மித்ரா, முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரை ஆளுநரின் அனுமதியோடு கடந்த மே மாதம் சிபிஐ கைது செய்தது. பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.
இதன் தொடர்ச்சியாக இந்த நாரதா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஊழல் தடுப்பு சட்டம் 1988-ன் படி சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் முன்பு சட்டமன்ற தலைவரிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் பிர்ஹத் ஹக்கீம், சுப்ரஜா முகர்ஜி, மதன் மித்ரா என மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு மேற்குவங்க சட்டமன்ற சபாநாயகரிடம் தெரிவிக்கப்படவில்லை.
இதனையடுத்து மேற்குவங்க சபாநாயகர், தன்னை கேட்காமல் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது ஏன் என வரும் 22 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சிபிஐ துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யேந்திர சிங்கிற்கும் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் ரத்தின் பிஸ்வாஸுக்கும் அதிரடியாகச் சம்மன் அனுப்பியுள்ளார்.