இந்தியாவில் தமிழகம், டெல்லி, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் மத்திய உள்துறை அமைச்சகமும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
குறிப்பாக, டெல்லியில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வார இறுதி நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது டெல்லி அரசு. இந்த நிலையில், இன்று (17/04/2021) செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லியில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றுக்கு பற்றாக்குறை உள்ளது. 24 மணி நேரத்தில் ஏறக்குறைய 24,000 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நவம்பரில் 4,100 படுக்கைகளை வழங்கிய மத்திய அரசு, தற்போது 1,800 படுக்கைகளை மட்டுமே வழங்கியுள்ளது. டெல்லியில் படுக்கை வசதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் 6,000 படுக்கைகள் அமைக்கப்படும் என நம்புகிறேன். கரோனா நோயாளிகளுக்கு 50% படுக்கைகளை ஒதுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தனிடம் கேட்டுக்கொண்டேன்" எனத் தெரிவித்தார்.