புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றால் கேரளாவுக்குட்பட்ட மாஹே பிராந்தியத்தை சேர்ந்த, வெளிநாடு சென்று வந்த மூதாட்டி பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். அதையொட்டி அவர் குடும்பத்தினர் மற்றும் அவர் வீட்டருகே வசித்த எவருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியானது. அதனால் புதுச்சேரி மாநிலத்தில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார். அதனால் அம்மாநில மக்கள் நிம்மதியடைந்தனர்.
இந்நிலையில் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்களில் புதுச்சேரி அரியாங்குப்பத்தில் இருவருக்கும், திருவண்டார் கோயிலில் ஒருவருக்கும் கரோனா தொற்று நேற்று உறுதியானது. இச்சூழலில் அரியாங்குப்பத்தில் கரோனா தொற்றுடைய ஒருவரின் 39 வயதுடைய மனைவிக்கும் கரோனா தொற்று இருப்பது இன்று மாலை உறுதியானது. இதையடுத்து அவர் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், "புதுச்சேரியில் தற்போது 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவரின் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. காரைக்காலில் பரிசோதித்த ஏழு பேரில் 6 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளது. ஒருவருக்கு முடிவு வரவேண்டியுள்ளது" என்றார்.