மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ட்ராக்டர் பேரணி நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது பேசிய மம்தா பானர்ஜி, "மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஒன்று நீங்கள் சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள் அல்லது நாற்காலியை விட்டு வெளியேறுங்கள். வேளாண் சட்டங்கள் பலவந்தமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. டெல்லியின் நிலைமையை மோடி அரசு மோசமாகக் கையாண்டுள்ளது. அங்கு நடந்ததற்கு பாஜகதான் பொறுப்பு. முதலில் டெல்லியைச் சமாளித்துவிட்டு மேற்கு வங்கத்தைப் பற்றி யோசியுங்கள்” எனக் கூறினார்.
இதனையடுத்து, மேற்கு வங்க சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'ஜெய் ஸ்ரீ ராம்' எனக் கோஷமிட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஏற்கனவே, டெல்லி, கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப், சட்டீஸ்கர், புதுச்சேரி உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், மேற்கு வங்கம் ஏழாவது மாநிலமாக வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.