அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க நிர்வாகிகள், இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அமைச்சர் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் எதிர்ப்பு எழுந்தாலும், மற்றொரு புறம் உதயநிதி ஸ்டாலினுக்கு பலர் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எதிர்க்கட்சிகளாகிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தற்போது இந்தியா கூட்டணி என்று மாற்றியுள்ளது. அவர்கள் பெயரைத் தான் மாற்றுவார்கள். மற்றபடி, அவர்களின் கொள்கைகளையும், நோக்கங்களையும் மாற்ற மாட்டார்கள். அவர்களின் ஒட்டுமொத்த செயல் திட்டமே சனாதன இந்து தர்மத்தை ஒழிப்பது மட்டும் தான். எனவே, இந்த கூட்டணியை ஒவ்வொரு இந்துவும் எதிர்ப்பது அவசியம்.
சனாதன தர்மம் குறித்து அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை உச்சரிக்க கூட எனக்கு விருப்பம் இல்லை. இந்துக்கள் அனைவரும் விழித்துக்கொண்டு அவர்களுக்குரிய இடத்தைக் காட்ட வேண்டும். இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டமான மும்பையில் நடந்த போதே, சனாதனம் குறித்து பேச வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. முகலாயர்கள், ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள் என அனைவரும் வந்தபோதும், சனாதன தர்மத்தை அழிக்க முடியவில்லை. அதனால், தற்போது காங்கிரஸும், இந்தியா கூட்டணியும் இது குறித்துப் பேசி வருகிறார்கள். அவர்கள் நீக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.