மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும், அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸுக்கும் இடையே சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஏற்கெனவே, ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பெண் ஒருவர், ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸ் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், தேர்தல் நேரத்தில் கொல்கத்தாவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.கவின் சின்னமான தாமரை சின்னத்தை ஆடையில் அணிந்து அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. இப்படிபட்ட பரபரப்பான மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் சுவேந்து அதிகாரி மற்றும் அம்மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் நேற்று (16-06-24) ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸை சந்திக்க வந்துள்ளனர். அவர்கள் ஆளுநரை சந்திக்க முறையான அனுமதி இருந்தும் அவர்களை ஆளுநர் மாளிகைக்குள் நுழையவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த ஆளுநர், ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.