கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அருகே போத்தன்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஜப்பார்(60). இவர் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மேலும், இவர் தனது வீட்டில் வைத்து மாணவர்களுக்கு அரபி பாடம் கற்றுக்கொடுத்து வந்துள்ளார்.
இவரிடம் ஏராளமான மாணவர்கள் அரபி பாடம் படித்து வருகின்றனர். அதில் 11 வயது கொண்ட மாணவர் ஒருவர் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அப்துல் ஜப்பார் அந்த மாணவரை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று அந்த மாணவரை அப்துல் ஜப்பார் மிரட்டி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் மனமுடைந்த அந்த மாணவர், தனக்கு நேர்ந்த கொடுமையைத் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், இந்தச் சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். அவர்கள் கொடுத்தப் புகாரின் பேரில் ஓய்வுபெற்ற ஆசிரியரான அப்துல் ஜப்பார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு போத்தன்கோடு விரைவு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நீதிமன்ற நீதிபதி நேற்று தீர்ப்பளித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘பாலியல் வன்கொடுமை செய்து வந்தவருக்கு எந்தக் கருணையும் காட்டவேண்டிய தேவை இல்லை’ என்று கூறி அப்துல் ஜப்பாருக்கு 56 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.78 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.