நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அமலில் இருக்கும் 40 நாட்களில் அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அமைச்சகத்தின் பணிகளில் வளர்ச்சிகள் குறித்து அதிகாரிகளுடனும் எம்பிக்களுடனும் ஆலோசனை நடத்துமாறும் மூத்த அமைச்சர்களுக்கு மோடி அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது பிரதமரும் வெளிநாட்டு பயணத்தை தவிர்த்து கூட்டத்தொடரில் விவாதத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல் மத்திய அமைச்சர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தங்கள் அலுவலகம் வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். நமது அலுவலகத்தில் உள்ள பணியாளர்களுக்கு நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என பிரதமர் அமைச்சர்களிடம் என கேட்டுக்கொண்டார். அனைத்து அமைச்சகங்களும் 5 ஆண்டு திட்டம் ஒன்றை வகுத்து அதன் அடிப்படையில் முதல் நூறு நாட்களுக்குள் எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை செயல்படுத்துமாறும் அமைச்சர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தார். மேலும் நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்தும் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.