ராமர் பாலம் குறித்து மாநிலங்களவையில் எம்.பி. கார்த்திகேய சர்மா கேள்வி எழுப்பினார். அவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசின் விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், “இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில் பாலம் இருந்தது எனத் துல்லியமாகக் கூற முடியவில்லை. செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் ஆய்வு செய்ததில் ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே சுண்ணாம்புக்கல் திட்டுக்கள் இருக்கிறது. சுண்ணாம்புக்கல் திட்டுக்களை சிதைந்த பாலத்தின் பகுதி என்றோ, மிச்ச சொச்சம் என்றோ கூற முடியாது.
பண்டைய காலங்களைப் பற்றி கண்டறிய நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வுகள் நடத்தப்படுகிறது. அதன் மூலம் ஹரப்பா நாகரீகம் பற்றிய தகவல்களைக் கண்டுபிடித்துள்ளோம். 18,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்பதால், ராமர் பாலம் பற்றிய தகவல்களைக் கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளன. 56 கி.மீ. நீளத்துக்கு பாலம் இருந்ததாக நாம் கருதுகிறோம். உண்மையில், அங்கு இருந்த சரியான கட்டமைப்பைக் குறிப்பிடுவது கடினம். அந்தக் கட்டமைப்புகள் இருந்ததற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு அறிகுறி இருக்கிறது” எனக் கூறினார்.