'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (26/12/2021) காலை 11.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, "குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி இறந்தது என் மனதைப் பாதித்தது. வருண் சிங் மரணத்தோடு பல நாட்கள் சாகசம் நிறைந்த யுத்தத்தை நிகழ்த்தி நம்மைப் பிரிந்து சென்றார். குன்னூர் விபத்தி உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு இந்தாண்டில் சவுர்யா சக்ரா விருது தரப்பட்டது. மறைந்த வருண் சிங்கிற்கு வருங்கால தலைமுறையினர் மீது பெரும் அக்கறை இருந்தது. புத்தகங்கள் நமக்கு அறிவைக் கொடுப்பதோடு அது நமது வாழ்க்கையை செதுக்குகிறது. பள்ளியில் நீங்கள் சராசரி மாணவராக இருக்கலாம்; ஆனால் வாழ்க்கையில் அது ஒரு அளவுகோல் அல்ல. எதில் நீங்கள் பணியாற்றுகிறீர்களோ அதில் அர்ப்பணிப்புடன் இருங்கள்; நம்பிக்கையை இழக்காதீர்கள்.
உலகத்தையே அச்சுறுத்தும் கரோனாவின் புதிய உருவமான ஒமிக்ரான் நம் கதவைத் தட்டத் தொடங்கியுள்ளது. ஒமிக்ரானை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். சர்வதேச பெருந்தொற்றை வீழ்த்த நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சிப்பது மிகவும் முக்கியம். இந்திய கலாசாரத்தைப் பற்றித் தெரிந்துக் கொள்ளவும், அதை பரப்பவும் பல்வேறு நாட்டினர் ஆர்வம் காட்டுகின்றனர். வரவிருக்கும் புத்தாண்டு நமக்கு புதிய வாய்ப்புகளை அளித்து, புதிய அத்தியாயத்தை எழுதும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.