உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அருண் வால்மீகி என்ற இளைஞர், அம்மாநில காவல்நிலையம் ஒன்றின் ஆதாரங்களைச் சேகரித்து வைக்கும் கட்டிடத்தில் துப்புரவுப் பணியாளராக இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை இரவு அவர் அந்த கட்டிடத்திலிருந்து 25 லட்சத்தைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டி உத்தரப்பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார்.
இந்தநிலையில், அருண் வால்மீகி உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டதாக உத்தரப்பிரதேச காவல்துறையினர் இன்று தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அருண் வால்மீகியின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றார். ஆனால் அவரை உத்தரப்பிரதேச காவல்துறையினர் வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து உத்தரப்பிரதேச காவல்துறையிடம் பிரியங்கா காந்தி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதன்பின்னர் உத்தரப்பிரதேச காவல்துறை பிரியங்கா காந்தியைக் கைது செய்துள்ளது. ஏற்கனவே லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கச் செல்ல முயன்றபோதும் பிரியங்கா காந்தியை உத்தரப்பிரதேச காவல்துறை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரியங்கா காந்தி கைது செய்யப்படுவதற்கு முன்பு, பெண் போலீஸார் அவரோடு செல்பி எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.