வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என ஒரு வருடத்திற்கு மேலாக விவசாயிகள் போராடி வந்த நிலையில், தற்போது வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பிரதமரின் தவறால் 700 பேர் உயிரிழந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளதோடு, இறந்த விவசாயிகளை பற்றி தரவுகள் இல்லை என கூறியதை விமர்சித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இறந்த விவசாயிகள் தொடர்பான பட்டியலை வெளியிட்ட ராகுல் காந்தி இதுதொடர்பாக கூறியுள்ளதாவது;
விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க அரசிடம் திட்டமுள்ளதா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. வேளாண் அமைச்சகத்திடம் இந்த விவகாரத்தில் எந்தப் பதிவும் இல்லை, எனவே அதுகுறித்து கேள்வி எழவில்லை என்று அமைச்சகம் பதிலளிக்கிறது. உண்மை என்னவென்றால் அவர்களிடம் விவரங்கள் உள்ளன. ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை.
நாங்கள் அவர்களுக்காக பணி செய்துள்ளோம் என அரசாங்கத்திடம் கூற விரும்புகிறோம். எங்களிடம், எங்களால் (பஞ்சாப் அரசு) 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்ட 403 விவசாயிகளின் பட்டியல் உள்ளது. 152 பேருக்கு வேலை அளித்துள்ளோம். மற்றவர்களுக்கும் வேலை அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களை சேர்ந்த (போராட்டத்தில் இறந்த) 100 விவசாயிககளின் பட்டியலும் எங்களிடம் உள்ளது. மற்ற விவசாயிகளின் பெயர்கள் பொதுத்தளத்தில் உள்ளது. அதை எளிதாக சரிபார்க்க முடியும். இந்த பட்டியல்கள் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
அரசாங்கம் தன்னிடம் ஒரு பட்டியல் இல்லை என்று கூறுகிறது. இதோ எங்களிடம் (இறந்த விவசாயிகளின்) பெயர்கள், எண்கள், முகவரிகள் உள்ளன. அரசாங்கத்திடம் இது ஏற்கனவே உள்ளது என்பதுதான் உண்மை. ஆனாலும் என்ன பிரச்சனை? பிரதமர் தான் தவறு செய்துவிட்டதாக கூறி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்தத் தவறினால் 700 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போது நீங்கள் அவர்களின் பெயர்களைப் பற்றி பொய் சொல்கிறீர்கள். அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் என்ன பிரச்சனை?. பிரதமர் மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் கோழைத்தனமானது. இந்திய பிரதமர் இப்படி நடந்து கொள்ளக்கூடாது.
இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "மோடிஜியிடம் தனது தொழிலதிபர் நண்பர்களின் எண்கள் மட்டுமே உள்ளது. தியாகிகளான விவசாயிகளின் பெயர்கள் மற்றும் எண்கள் எங்களிடம் உள்ளன. நீங்கள் உண்மையிலேயே மன்னிப்பு கேட்க விரும்பினால், இந்த குடும்பங்களை அழைத்து, அவர்களின் துயரத்தைக் கேட்டு, இழப்பீடு வழங்குங்கள். பஞ்சாபின் காங்கிரஸ் அரசு எந்த தவறுமின்றி மனிதாபிமானத்திற்காக இதைச் செய்தது" என கூறியுள்ளார்.