2019-20-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார். இதில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்திய சவுபாக்கியா திட்டத்தைப் பற்றிப் பேசிய அவர், “நாடுமுழுவதும் உள்ள வீடுகளுக்கு மின்வசதி அளிக்கும் திட்டம் ஏறக்குறைய முடியும் தருவாயில் உள்ளது. அதேசமயம் ஏறக்குறைய 2.50 கோடி வீடுகளுக்கு மின்வசதி கிடைக்கவில்லையென அடையாளம் காணப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சவுபாக்கியா திட்டத்தில், இதுவரை வீடுகளுக்கு மின் வசதி அளிப்பதற்காக ரூ. 16,320 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 2 கோடியே 48 இலட்சத்து 19 ஆயிரத்து 168 வீடுகளுக்கு மின் வசதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் 2 கோடியே 48 இலட்சத்து 47 ஆயிரத்து 762 வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. மின் வசதி இல்லாத இந்த வீடுகளுக்கு வரும் மார்ச் மாதத்திற்குள் மின் இணைப்பு வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.