Skip to main content

மத்திய அரசுக்கு அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்!

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
The High Court fined the Union Government

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்பஜன் கவுர் என்பவரது நிலம் மத்திய அரசால் கடந்த 1987 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது அவரது நிலத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானது அல்ல எனக் கூறி ஹர்பஜன் கவுர் குர்தாஸ்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் ஹர்பஜன் கவுருக்கு சந்தை மதிப்பின் அடிப்படையில் கூடுதல் இழப்பீடும், தாமதமான காலத்திற்கு வட்டியும் வழங்க உத்தரவிட்டிருந்தது.

கூடுதல் இழப்பீடும், தாமதமான காலத்திற்கு வட்டியும் வழங்க உத்தரவிட்டிருந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன் குர்தாஸ்பூர் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டிருந்தது.

மேலும் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவில் வட்டி வழங்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அப்போது கூடுதல் சந்தை மதிப்பு என்பது இழப்பீட்டின் ஒரு பகுதியே என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது என நீதிபதி தெரிவித்தார். இருப்பினும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி மத்திய அரசின் வழக்கறிஞர் வட்டி வழங்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிலையில் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக கூறி மத்திய அரசுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பஞ்சாப் உயர்நீதிமன்ற  நீதிபதி ரஜ்பீர் சேராவத் அதிரடி உத்தரவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்