சமூகவலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கோரி ஒரு சாரார் தொடர்ந்து கோரிக்கை விடுத்தது வந்தனர். அதேபோல் ஓ.டி.டி தளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்து வந்தது. இந்தநிலையில் சமூக வலைதளங்களுக்கும், ஓ.டி.டி தளங்களுக்கும் மத்திய அரசு இன்று கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
சமூக வலைதளத்திற்கான கட்டுப்பாடுகள்:
சமூக வலைதளங்கள் குறை தீர்க்கும் முறையை தங்கள் தளங்களில் சேர்க்கவேண்டும். பயனாளர்கள் தெரிவிக்கும் எந்தவொரு குறையும், 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் தீர்க்கப்படவேண்டும். பயனாளர்களின் கௌரவத்திற்கு எதிராகப் புகார்கள் வந்தால், குறிப்பாக பெண்களின் கண்ணியம் தொடர்பான புகார்கள் (நிர்வாணம், ஆள்மாறாட்டம் உள்ளிட்டவை) வந்தால் அந்தப் பதிவுகள் 24 மணிநேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும். சமூக வலைதளங்கள், தலைமை இணக்க அலுவலர் (Chief Compliance Officer), நோடல் தொடர்பு நபர் ஆகியோரை நியமிக்க வேண்டும். இவர்கள் இந்தியாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். தவறான தகவல்களை முதலில் பதிவிடுபவர்களை சம்மந்தப்பட்ட சமூக வலைதளம் கண்டறிய வேண்டும். அரசோ, நீதிமன்றமோ கேட்டால் அதுகுறித்த தகவல்களைத் தர வேண்டும். ஒருவேளை அவ்வாறு பதிவிட்டவர், வெளிநாட்டில் இருந்தால் இந்தியாவில் முதலில் அதைப் பதிவிட்டவர் குறித்த தகவலை தர வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் சமூகவலைதளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.
ஓ.டி.டி. தளங்களுக்கான கட்டுப்பாடுகள்:
ஓ.டி.டி. தளங்கள், பதிவு செய்துகொள்வது கட்டாயமில்லை. ஆனால், தளங்கள் குறித்த தகவல்களை அரசு கேக்கும். தளங்களில் எவ்வாறு எங்கிருந்து கண்டென்டுகள் பதிவேற்றப்படுகிறது என்ற தகவல்களை வழங்க வேண்டும். குறை தீர்க்கும் முறை இருக்க வேண்டும். ஒரு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது ஒரு சிறந்த நபரின் தலைமையிலான சுய ஒழுங்காற்று முறை இருக்க வேண்டும். வயதிக்கேற்றார் போல் (U,16+, ADULT ETC) கண்டென்டுகள் பிரித்து வைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஓ.டி.டி தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.
ஓ.டி.டி தளங்களுக்கான கட்டுப்பாடுகள் மூன்று மாதத்திற்குப் பிறகு அமலுக்கு வருமெனவும், சமூக வலைதளங்களுக்கான கட்டுப்பாடுகள் அரசு கெசட்டில் வெளியானவுடன் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.