மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள ‘டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி, பல தடைகளைக் கடந்து டெல்லி சென்றடைந்தது. டெல்லியின், புராரி பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து 48-ஆவது நாளாக, விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று (11/01/2021) உச்சநீதிமன்றத்தில் வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, " வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க தயாராக இருந்தால், விசாரிக்க குழு அமைக்கிறோம். வேளாண் திருத்தச் சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா என சொல்லுங்கள்; இல்லையேல் நாங்கள் நிறுத்தி வைக்கிறோம். இது எங்களுக்குப் பயனளிக்கிறது என்று இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. யாருடைய ரத்தத்தையும் எங்கள் கைகளில் வைத்திருக்க விரும்பவில்லை. அமைதி போராட்டம் அப்படியே நடைபெறும் என்று யாரும் உறுதி கூற இயலாது. வயதானவர்கள் உள்ளிட்டவர்கள் தற்கொலை செய்கிறார்கள். அரசு இதுகுறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும்" என்றார்.