Skip to main content

"அவர்கள் பயப்படுகிறார்கள், நாடு அல்ல" - ராகுல் காந்தி!

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

rahul gandhi

 

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அப்போராட்டத்திற்கு ஆதரவாக, பல்வேறு வெளிநாட்டுப் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். அந்தவகையில் விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழலியல் போராளி க்ரேட்டா தன்பெர்க், விவசாயிகள் போராட்டத்தை எப்படி நடத்தலாம் என்ற வழிமுறைகள் அடங்கிய ஆவணம் (toolkit) ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். ஜனவரி 26 ஆம் தேதி, விவசாயிகள் போராட்டத்தில் கலவரம் வெடித்த நிலையில், க்ரேட்டா தன்பெர்க் பகிர்ந்த டூல்கிட் மீது, டெல்லி வன்முறைக்குக் காரணமாக  இருந்ததாக வழக்குப் பதிவுசெய்தனர்.

 

அதனைத் தொடர்ந்து, 22 வயதான இந்தியச் சூழலியல் ஆர்வலர் திஷா ரவி, க்ரெட்டா தன்பெர்க் பகிர்ந்த ஆவணத்தை உருவாக்கியவர்களுள் ஒருவர் எனவும் அவரே அந்த ஆவணத்தை க்ரெட்டாவுடன் பகிர்ந்துகொண்டார் எனவும் அவருக்குக் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுடன் தொடர்பு உள்ளதாகவும் கூறி டெல்லி போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். திஷா ரவியின் கைதுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

இந்தநிலையில் ராகுல் காந்தி, திஷா ரவியின் கைது தொடர்பான செய்தி, டூல்கிட் தொடர்பாக யூடியூபர் ஒருவர் பத்திரிகையாளரை மிரட்டியது தொடர்பான செய்தி, இந்திய அரசை விமர்சிக்கும் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது மற்றும் ட்விட்டர் நிறுவன அதிகாரிகளை மத்திய அரசு மிரட்டியதாக வந்த செய்தி ஆகியவற்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ராகுல் காந்தி அந்தப் பதிவில், "உங்கள் உதடுகள் பேச சுதந்திரம் உள்ளது. உண்மை இன்னும் உயிருடன் இருக்கிறது என்று சொல்லுங்கள்!. அவர்கள் பயப்படுகிறார்கள், நாடு அல்ல!" எனத் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்