இன்று கேரள சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றிய அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஒரு பகுதியை தனது உரையில் வாசித்தார். சிஏஏ எதிர்ப்பு குறித்து பேசப்போவதில்லை என அவர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயனின் "விருப்பத்திற்கு மதிப்பளிப்பதற்காக" கூறி அந்த உரையை வாசித்தார்.
குடியுரிமை திருத்த சட்டம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல பாஜக சார்பில் நாடு முழுவதும் சிஏஏ ஆதரவு பேரணிகளும், விளக்க கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக கேரள மாநில சட்டசபை கூட்டத்தில், இந்த சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரளா சார்பில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.
கேரள அரசின் சிஏஏ எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அம்மாநில ஆளுநர் முகமது ஆரிப் கான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில் கேரள சட்டசபையில், ஆளுநர் உரையின் போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வாசகங்களை வாசிக்கப் போவதில்லை என்று அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது, ஆளுநர் உள்ளே வந்ததும் ஐக்கிய ஜனநாயக முன்னனி எம்.எல்.ஏக்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து பினராயி விஜயன், ஆளுநரை அழைத்து சென்று இருக்கையில் அமர வைத்தார். பின்னர் பேசிய ஆளுநர், "இப்போது நான் பாரா 18 க்கு வருகிறேன். கடந்த சில நாட்களாக நான் முதலமைச்சருடன் பேசினேன். இந்த விஷயத்தில் எனது பார்வை வேறு. இருப்பினும் முதல்வரின் ஆசைப்படி நான் இதனை படிக்கிறேன்" என கூறி சிஏஏ வுக்கு எதிரான அந்த உரையை அவர் படித்தார்.