288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணியில் மோதல் ஏற்பட்டதால் அந்த கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தங்களுக்கு இரண்டரை ஆண்டுகள் தருமாறு சிவசேனா விடுத்த கோரிக்கையை ஏற்க பாரதீய ஜனதா மறுத்ததே இதற்கு முக்கிய காரணம் ஆகும். இதையடுத்து 105 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதாவிடம், ஆட்சி அமைக்க விருப்பமா? என்று ஆளுநர் பகத்சிங் கோஷியாரி கேட்க, அந்த கட்சி விருப்பம் இல்லை என்று கூறி பின்வாங்கிவிட்டது.
இதனால் 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ள 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை அழைத்த ஆளுநர், ஆட்சி அமைக்க முடியுமா? என்பது பற்றி நேற்று முன்தினம் இரவுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிய சிவசேனா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடியது. அப்போது, ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கவேண்டுமானால் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று சிவசேனாவுக்கு சரத் பவார் நிபந்தனை விதித்தார். அதை ஏற்று மத்தியில் உள்ள பாரதீய ஜனதா கூட்டணி அரசில் இருந்து சிவசேனா நேற்று விலகியது. அந்த கட்சியின் ஒரே மந்திரியான அரவிந்த் சாவந்ந் ராஜினாமா செய்தார். இதற்கிடையே திடீர் திருப்பமாக குடியரசு தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த எதிர்க்கட்சிகள் தற்போது மீண்டும் ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. விரைவில் என்சிபி-காங்கிரஸ்- சிவசேனா கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.