இந்தியாவில் கரோனா பாதிப்பு குறையத்தொடங்கியுள்ளது. ஆனால் பலருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கருப்பு பூஞ்சைக்கான மருந்தான லிபோசோமல் ஆம்போடெரிசின்-பி மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், மருந்து தட்டுப்பாடு குறித்து வேதனை தெரிவித்துள்ளனர் இதுதொடர்பாக அவர்கள், "நாம் இந்த நரகத்தில் வாழ்கிறோம். அனைவரும் இந்த நரகத்தில் வாழ்கிறோம். நாங்கள் இந்தநிலையில் உதவ நினைக்கிறோம். ஆனால் நாங்களே உதவியற்றவர்களாக இருக்கிறோம்" என தெரிவித்தனர். மேலும் மற்றவர்களை விடுத்து உங்கள் இருவருக்கு மட்டும் உதவும் வகையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.
இந்த வழக்கில் பதிலளித்த மத்திய அரசு, தடுப்பூசி பற்றாக்குறையை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்திடம் விளக்கியது. அப்போது ஆறு நாடுகளிலிருந்து 2.30 லட்சம் ஆம்போடெரிசின்-பி மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறியது. அதற்கு நீதிபதிகள், இன்றைக்கு மருந்தின் தேவை மிக அதிகமாக இருக்கையில், 2.30 லட்சம் மருந்துகளை மட்டுமே இறக்குமதி செய்ய காரணம் என்ன என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.
மேலும் இறக்குமதி செய்யப்படும் 2.30 மருந்துகளின் தற்போதைய நிலை என்ன? அவை தற்போது எங்குள்ளன? அவை எப்போது இந்தியாவிற்கும் வரும்? என கேள்வியெழுப்பிய நீதிபதிகள் இதுதொடர்பாக திங்கட்கிழமை பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.