இந்தியாவிலேயே முதன்முறையாக உணவு தானியங்களை வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தை ஹரியானா அரசு குருகிராமில் சோதனை முயற்சியாக நிறுவியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ‘உலகளாவிய உணவுத் திட்ட’த்தின் ஒரு பகுதியாக இந்த உணவு தானிய ஏ.டி.எம் நிறுவப்பட்டுள்ள நிலையில், இந்த முயற்சி வெற்றிபெற்றால் மாநிலம் முழுவதுமுள்ள நியாய விலைக் கடைகளில் உணவு தானிய ஏ.டி.எம்-மை நிறுவ ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது.
நியாய விலைக் கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்கவும், பொதுமக்களுக்கு எளிதாக உணவு தானியங்களை வழங்கவும் இந்த உணவு தானிய ஏ.டி.எம் நிறுவப்பட்டுள்ளது. உணவு தானிய ஏ.டி.எம் குறித்து துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டின் முதல் உணவு தானிய ஏ.டி..எம் 'அன்னபூர்த்தி' ஹரியானாவின் குருகிராம் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது என்பதைப் பெருமையுடன் அறிவிக்கிறேன். அரசாங்கத்தால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் தானியங்களை எளிதாகவும், சிக்கலில்லாமலும் விநியோகிப்பதே இந்த ஏ.டிஎம்-மின் நோக்கம்" என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த உணவு தானிய ஏ.டி.எம். குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையில் துஷ்யந்த் சவுதாலா, "உணவு தானிய ஏ.டி.எம். வங்கி ஏ.டி.எம். போலவே செயல்படும். இந்த உணவு தானிய ஏ.டி.எம்-மில் தானியங்களை எடையிடுவதில் ஏற்படும் பிழை குறைவாகவே இருக்கும். இதில் தொடுதிரையுடன் கூடிய பயோமெட்ரிக் முறையும் உள்ளது. பயனர்கள், தங்கள் ஆதார் அல்லது ரேஷன் கார்டு எண்ணைக் கொண்டு தங்களுக்கான உணவு தானியங்களைப் பெற வேண்டும்" என தெரிவித்துள்ளார். இந்த ஏ.டி.எம் 5 - 7 நிமிடங்களில் 70 கிலோ உணவு தானியங்களை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.