தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் இன்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதே சமயம் அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தேசிய பேரிடர் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இரு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதோடு மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க இரண்டு விமானப்படை ஹெலிகாப்டர்கள் கோவை மாவட்ட சூலூரில் இருந்து சென்றுள்ளன.
இத்தகைய சூழலில் தான் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வயநாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினரிடம் எனது எண்ணங்கள் உள்ளன. இந்த நிலச்சரிவில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுவதற்காக தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உடன் பேசினேன். அப்போது மத்திய அரசு அனைத்து உதவிகளையும் கேரளாவிற்கு செய்யும் என உறுதி அளித்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து இந்த நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிருந்து (PMNRF) 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.