இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக டெல்லி இருந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது அம்மாநிலத்தில் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் டெல்லியில் தினசரி கரோனா பாதிப்பு 107 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் டெல்லியில் உறுதியான அதிகபட்ச கரோனா பாதிப்பு இதுவாகும்.
இந்தநிலையில் ஒமிக்ரான் பரவல் குறித்து டெல்லி அரசு இன்று அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டதிற்கு பிறகு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இந்த முறை ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது; ஒமிக்ரான் அச்சுறுத்தலைக் கண்டு பீதி அடையத் தேவையில்லை. புதிய கரோனா திரிபு ஏதேனும் பரவினால் கூட, மருத்துவமனைகளில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறை ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்காது. ஒமிக்ரான் கரோனாவின் மிதமான மாறுபாடு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒமிக்ரான் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக உள்ளது.
கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாதிப்பு 100ஐத் தூண்டியுள்ளது. இவை எந்த வகையான கரோனா பாதிப்புகள் எனத் தெரியவில்லை. எனவே அதை உறுதிப்படுத்த, மரபணு வரிசைமுறைக்கு அனைத்து கரோனா உறுதியான அனைவரின் மாதிரிகளையும் அனுப்ப முடிவு செய்துள்ளோம். பூஸ்டர் டோஸ்களை அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் .