பல வருடங்களாகவே 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற கூற்றை மத்திய பாஜக அரசு வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் தேர்தல் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 'ஒரே நாடு ஒரு தேர்தல்' என்பதற்கான சட்டத் திருத்தங்களை இந்த சிறப்புக் கூட்டத்தில் கொண்டு வருவார்களா அல்லது மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதா நீண்ட நாட்களாகக் கிடப்பில் உள்ள நிலையில், அதனை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்குமா அல்லது வேறு ஏதேனும் புதிய அறிவிப்பை வெளியிடுமா எனப் பல்வேறு வியூகங்கள் கிளம்பி உள்ளன.
அண்மையில் பாஜக அரசு சிலிண்டருக்கு 200 ரூபாய் குறைத்து அறிவிப்பு வெளியிட்ட நிலையில், இதுபோன்ற வேறு ஏதேனும் கவர்ச்சிகரத் திட்டத்தை வெளியிடுமா என்றும் வியூகங்கள் கிளம்பியுள்ளன.