பசு பாதுகாப்பு அமைச்சகம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பசுக்களைப் பாதுகாக்க புதிதாக வரி விதிக்கலாமா என்ற யோசனையில் இருப்பதாக மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் பசுக்கள் பராமரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதோடு, பசுக்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வருங்காலத்தில் பசுக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் 'பசு பாதுகாப்பு அமைச்சகம்' அமைக்கப்படுவதாக மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அண்மையில் அறிவித்தார். அதன்படி புதிதாக அமைக்கப்பட்ட இந்த அமைச்சகத்தின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்றபின் அகர்மல்வா பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றி பேசிய சிவராஜ் சிங் சவுகான், "மாடுகளின் நலனுக்காகவும், மாட்டுக் கொட்டகைகளின் பராமரிப்பிற்காகவும் பணம் திரட்டுவதற்கு சில வரிகளை விதிக்கலாம் என யோசிக்கிறேன். நாம் பொதுவாக வீடுகளில் செய்யப்படும் உணவை முதலில் மாடுகளுக்குக் கொடுப்போம். இதேபோல், கடைசியாக உள்ள உணவை நாய்களுக்குக் கொடுப்போம். இப்படிப்பட்ட நம் இந்தியக் கலாச்சாரத்தில் விலங்குகள் மீதான அக்கறை இப்போது மறைந்து வருகிறது, எனவே மாடுகளுக்காகப் பொதுமக்களிடமிருந்து சில வரிகளை வசூலிக்க நாங்கள் சிந்தித்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.