காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கடந்த 11 ஆம் தேதி (11.07.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “தமிழகத்திற்கு ஜூலை 12 ஆம் தேதி (12.07.2024) முதல் வரும் 31ஆம் தேதி வரை நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்” எனக் கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று (14.07.2024) அனைத்து கட்சி கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், பாஜக மாநில தலைவர் சி.டி.ரவி, நீர்ப்பாசனத்துறை துறை அதிகாரிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், பாஜக தலைவர்கள், மைசூரு ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடக்கூடாது என்றும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முன் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
இருப்பினும் காவிரியில் நீர் இருப்பின் தற்போதைய நிலவரத்தைக் கருத்தில் கொண்டு கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து நாளை (15.07.2024) முதல் 8 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விடலாம் என்றும், மழை பெய்தால் இந்த எண்ணிக்கையை அதிகரிப்போம் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதனைச் சட்ட ஆலோசனை குழுவின் உறுப்பினர் மோகன் கட்டார்கி முன்மொழிந்தார். எனவே நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரைத் தமிழகத்திற்குத் திறக்க முடியாது. இந்த மாதம் இறுதிவரை தினமும் ஒரு டிஎம்சி என மொத்தமாக 20 டிஎம்சி நீர் திறக்க வேண்டுமெனக் காவிரி ஒழுங்காற்றுக் குழு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம்” எனத் தெரிவித்தார். இதன் மூலம் ஜூலை 12 முதல் 31 வரை தினமும் 1 டிஎம்சி (11 ஆயிரத்து 500 கன அடி) தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவைக் கர்நாடக அரசு ஏற்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.