சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘கொட்டுக்காளி’, இப்படத்தை கூழாங்கல் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுகளை விருதுகளையும் பெற்றது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 23ஆம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர்களுடன் வெற்றிமாறன், மிஷ்கின் ஆகிய இயக்குநர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “தமிழில் பெண்கள், எனக்கு இரண்டு பாட்டு இருக்கா? மூன்று டான்ஸ் இருக்கா? என்று கேட்டு நடிக்க வருவதே இல்லை. ஆனால் படக்குழுவினர் இங்கிருந்து சென்று அன்னா பென் என்ற சிறுக்கியை பிடித்து வந்துள்ளனர். இப்படத்தில் அவர் ஒன்றரை வார்த்தைதான் பேசியுள்ளார். சிறந்த முறையில் நடித்துள்ளார். இந்த வருடம் அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று ஆசீர்வதிக்கிறேன். அதன் பிறகு சூரி இவர் காமெடியனாக உருவாகி இன்றைக்கு உலகம் போற்றும் நடிகராக மாறியுள்ளார். இந்த படத்தில் சூரியை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க முடியாது. இப்படத்தில் சூரி ஒரு இடத்தில் மூத்திரம் அடித்துள்ளார். அதில் அவர் நடிக்கவே இல்லை வாழ்ந்துள்ளார். அந்த காட்சியில் நான் கேமராவை கீழே காண்பித்துவிடுவார்கள் என்று பயந்துவிட்டேன். ஆனாலும் கிழே பார்க்கலாம் என்று ஆசையும் வந்தது. ஆனால், மேலேயே கேமராவை வைத்துள்ளனர். என்ன ஒரு நடிப்பு, எவ்வளவு நம்பிக்கை அந்த கேமரா மீது. இந்த படத்திற்கு பிறகு சூரியை இந்தியாவின் மிகப்பெரிய நடிகராக பார்க்கலாம்.
மாரி செல்வராஜின் வாழை படம் பார்த்து எனக்கு மூன்று நாள் தூக்கம் இல்லாமல் பைத்தியமே பிடித்துவிட்டது. அதன் பிறகு இந்த படத்தை பார்த்தபோது எனக்கு பேயே பிடித்துவிட்டது. இந்த படத்தில் இசையை பயன்படுத்தவில்லை என்பது குருட்டாம்போக்கில் எடுத்த முடிவு அல்ல. அது இயக்குநர் பார்வை. அவர் எப்படி சினிமாவை உண்மையாக பார்க்கிறான் என்பதுதான் அதற்கு காரணம். எதோ ஒரு வகையில் இசை மூலம் நம் திரைப்படம் என்ற சட்டையை அயன் பண்ணிவிடுகிறோம். ஆனால் என் சட்டை (கொட்டுக்காளி) சுருக்கமாகவே இருக்கட்டும் என நினைக்கிறார் வினோத். அவரின் படத்தை மக்களிடம் கொண்டு செல்வதை பெரிய பொறுப்பாக பார்க்கிறேன். என் மகள் பிறக்கும்போது எவ்வளவு சந்தோஷபட்டேனோ அந்த அளவிற்கு இந்த படத்தை பார்த்து சந்தோஷப்படுகிறேன். இந்த படத்தை மக்கள் பார்க்க வேண்டுமென்பதற்காக நான் ஆடையின்றி கூட நிற்க தயாராக இருக்கிறேன். ஏனென்றால் அப்போதுதான் அவர்களுக்கு உரைக்கும். இந்த படத்தை பார்க்க சொல்லி ஆடையின்றி நடனமாடும் ஆட்டத்தை மேடையில் ஆடப்போகிறேன். நான் அந்த மாதிரி ஆடினால் என்ன ஆவீர்கள்? இதையும் போஸ்ட் செய்து இந்த படத்தை பாருங்கள் என சொல்லலாம்.
நம்ம ரசிகர்கள் சினிமா பார்க்க வருவதே ஆடையின்றி ஆடுவதை பார்க்கத்தான். இந்த சமூகத்தில் ஒரு கலைப் படைப்பை வெகுஜன சினிமாவை போலவே பார்க்கிறார்கள். இன்றைக்கு 16 வயதினிலே படம் எடுத்தால் ஓடுமா? என்ற சந்தேகம் வந்துவிட்டது. என் ஆதங்கத்தை கொட்டி தீர்க்கவில்லை. இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கத்தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். சிட்டியில் உள்ளவர்கள் இப்படத்தை கிராமத்து கதை என்று சொல்கிறார்கள். ஆனால் இப்படம் என் தாயின் கருவறை மற்றும் என் மகளின் யோனி. இளையராஜா காலில் முத்தமிட்டுள்ளேன் இரண்டாவதாக இயக்குநரின் காலில் முத்தமிடவுள்ளேன். அந்த அளவிற்கு இந்த படத்தை எடுத்துள்ளார். சமூகத்தின் இதயங்களை தொட்டு விடலாம் என்று அவர் கதை எழுதியுள்ளார். ஒரு நல்ல கதையும் ஒரு நல்ல கதையின் ஆசிரியரும் தோற்கப்படுவதில்லை, அவர்கள் சமூகத்தால் கொலை செய்யப்படுகிறார்கள். கொலை செய்து விடலாம், ஆனால் அந்த கொலையில் இருந்து தப்பிக்க வைப்பது தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்தான்” என்றார்.