சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஒரு வருடத்திற்கு மேல் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன.
இருப்பினும் மீண்டும் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். இது தொடர்பான விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதன் ஒரு பகுதியாக நேற்று (12.08.2024) வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை தரப்பும், செந்தில் பாலாஜி தரப்பும் கடுமையான வாதங்களை முன் வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது நாளை (14.08.2024) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா மற்றும் ஜார்ஜ் மாலி ஆகியோர் அமர்வு நாளை தீர்ப்பளிக்க உள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாகச் சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.