Skip to main content

சொன்னபடி சம்பவம் செய்த ஹிண்டன்பர்க்; புயலை கிளப்பிய புதிய அறிக்கை!

Published on 11/08/2024 | Edited on 11/08/2024
Adani denies Hindenburg report on SEBI chief

அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், உலகில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து வெளியிடும். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில் பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்திக் காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் துவங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச் செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

ஹிண்டர்பர்க் அறிக்கை வெளியான உடனேயே, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை மாபெரும் சரிவை சந்தித்தது. இதனால், அதானி குழுமத்திற்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதனையடுத்து தீங்கு இழைக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை ஆதாரமற்றது என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என அதானி குழுமம் தெரிவித்தது. 

இதற்கு பதிலடி கொடுத்த ஹிண்டன்பர்க், அறிக்கையின் முடிவில் 88 கேள்விகளை முன்வைத்துள்ளோம். ஆனால் எந்த கேள்விக்கும் பதிலளிக்காத அதானி குழுமம் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது. நாங்கள் வெளியிட்ட அறிக்கையில் உறுதியாக இருக்கிறோம். இதுகுறித்த ஆவணங்கள் தொடர்பான நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது என தடாலடியாக கூறியது. இது தொடர்பான உச்சநீதிமன்ற கண்காணிப்பில் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன்பு ஹிண்டர்பர்க் ரிஷர்ச் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், ‘விரைவில் இந்தியாவில் பெரிய சம்பவம் நடக்கப்போகிறது’ என்று பதிவிட்டிருந்தது.  இந்த நிலையில் அதானி குழுமம் முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின்(SEBI) தலைவர் மாதபி புச் தனது கணவருடன் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருப்பதாக ஹிண்டன்பர்க் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.  மேலும், இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்ததாலே அதானி குழுமம் மீது செபி தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது.

அதானி குழுமம் முறைகேடு விவகாரத்தைச் செபி விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது அதன் தலைவர் மீதே ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு புகார் கூறியுள்ளது இந்தியா முழுவதும் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், ஹிண்டன்பர்க்கின் அறிக்கை உள்நோக்கம் கொண்டது என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளது. இந்த அறிக்கை தவறானவை; உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. எங்களது வெளிநாட்டு முதலீடுகள் முற்றிலும் வெளிப்படைத்தன்மை கொண்டவை எனக் குறிப்பிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்