Skip to main content

வன்முறை தேசமாக மாறிய வங்க தேசம்; இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா!

Published on 05/08/2024 | Edited on 05/08/2024
Sheikh Hasina took refuge in India after resigning as Prime Minister

வங்காள தேசத்தில், பங்களாதேஷ் அவாமி லீக் கட்சி சார்பில் ஷேக் ஹசீனா 15 வருடங்களாகப் பிரதமராகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியும், இந்தியாவை விட அதிகமான உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை எட்டியபோதும், அங்கு கடுமையான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள், அதிகரித்து வரும் செலவுகளை, குறிப்பாக உணவுப் பொருட்களின் விலையேற்றத்தைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். மேலும், பிரதமர் ஷேக் ஹசீனா மீது ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் போன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்து வந்தன.

அதனால், வங்கதேச தேசியக் கழகம் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய இரு பிரதான எதிர்க்கட்சிகள், பிரதமர் உடனடியாக பதவி விலகவும், ஆளும் ஆட்சி கலைக்கப்பட்டுத் தேர்தல் முடியும் வரை கட்சி சார்பற்ற அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன. இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 50 சதவீத இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று அனைவரது புருவங்களையும் உயர்த்தியது. இதன்மூலம், ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக வங்காள தேச நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆனால், பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு இந்த நிம்மதி நீண்டநாள் நீடிக்கவில்லை. இட ஒதுக்கீடு வடிவத்தில் பெரும் தலைவலி ஷேக் ஹசீனாவை படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறது. வங்கதேசத்தில் 1971-ம் ஆண்டு போரில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த 2018-ல் அரசு முடிவு செய்தது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதையடுத்து அரசு நிறுத்தி வைத்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீதிமன்றமும் தீர்ப்பு விதித்தது.

Sheikh Hasina took refuge in India after resigning as Prime Minister

இந்த விவகாரம் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் பெரும் கோவத்தை ஏற்படுத்திய நிலையில், கடந்த மூன்று மாதங்களாகப் பல கட்டப் போராட்டங்களும் கலவரங்களும் நடந்து, வங்கதேசமே கலவரக்காடாக காட்சியளிக்கிறது. இதுவரை இந்த போராட்டங்களில் இதுவரை இருநூறுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர்.  பாகுபாட்டுக்கு எதிரான மாணவர்கள் இயக்கம் எனும் பெயரில், இயங்கும் அமைப்பினர் இந்த போராட்டத்தை அணையாமல் பார்த்துக் கொண்டனர். இவர்களுக்கு எதிராக, ஆளும் அவாமீ லீக் கட்சியின் மாணவர் பிரிவு நிர்வாகிகள் களமிறங்கினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமையான நேற்று கட்டிடங்கள், வாகனங்களுக்குப் போராட்டக்காரர்கள் தீவைத்தனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் கையெறி குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களும் போலீஸார் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 14 போலீஸ்காரர்கள் உட்பட 90க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், 300க்கும் அதிகமானோர் கடந்த மூன்று மாதங்களில் வங்கதேசத்தில் பலியாகியுள்ளனர். போராட்டத்தை, முடிவுக்குக் கொண்டுவரும் வழியில், அமைதிப் பேச்சுக்கு அரசு அழைப்பு விடுத்தது. ஆனால், அதை மாணவ அமைப்புகள் புறக்கணித்தது. 

இந்தநிலையில் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்திய பிரதமர் ஷேக் ஹசீனா "அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மாணவர்கள் இல்லை. அவர்கள் தீவிரவாதிகள். நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் அவர்கள் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மக்கள் இந்த நாசவேலையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, வன்முறைகளைக் கட்டுக்குள் கொண்டுவர, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்நாட்டில் அனைத்து இணையச் சேவைகள் முடங்கியுள்ளன.

Sheikh Hasina took refuge in India after resigning as Prime Minister

இந்தநிலையில், பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் அவகாசம் கொடுத்த அந்நாட்டு ராணுவம் அவரை ராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில், அவர் ராணுவ ஹெலிகாப்டரில் அங்கிருந்து தப்பிச் செல்வது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.  ஷேக் ஹசீனாவுடன் அவரது சகோதரி ரெஹானாவும் ஹெலிஹாப்டரில் சென்றுள்ளார்.

இந்த நிலையில், ஷேக் ஹசினா பயணம் செய்த ஹெலிஹாப்டர் இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படைத் தளத்தில்  தரையிறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசினா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே ஷேக் ஹசினா நாட்டை விட்டு வெளியேறிய தகவல் போராட்டக்காரர்களுக்குக் கிடைத்ததும், அவர்கள் வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள பிரதமர் ஷேக் ஹசினா இல்லத்திற்குள் நுழைந்து உற்சாக முழக்கமிட்டனர்.