Skip to main content

அப்போ நான் மேயர் இல்லையா?; கோவை மாநகராட்சி தேர்தல் பரபரப்பு!

Published on 05/08/2024 | Edited on 07/08/2024
 DMK candidate Selected Coimbatore Mayor election

கோவை மாநகராட்சியில் மொத்தம் நூறு வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 97 பேர் தி.மு.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். மற்ற மூவர் அதிமுக கவுன்சிலர்கள். கோவையின் முதல் பெண் மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி கல்பனா ஆனந்தகுமார் கோவை மேயராக பதவி வகித்து வந்தார். இவர் கடந்த மாநகராட்சி தேர்தலில், கோவை மாநகராட்சியின் 19ஆவது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழலில்தான், கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார்,  தனது பதவியைக் கடந்த ஜூலை 3ஆம் தேதி ராஜினாமா செய்தார். மேலும், மேயர் பதவியில் இருந்து கல்பனா ராஜினாமா செய்தது குறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவிக்கையில், “உடல்நிலை மற்றும் குடும்பச் சூழ்நிலை போன்ற தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்வதாகக் கடிதம் அனுப்பியுள்ளார்” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க கவுன்சிலர்களே கல்பனாவுடன் வாக்குவாதத்தில் ஈட்டுப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் தி.மு.க.வின் கோவை மாநகர முதல் மேயர் ஆகிய சிறப்புகளுடன் பதவியேற்ற கல்பனா ஆனந்தகுமார் இரண்டே ஆண்டுகளில் தனது பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பை கிளப்பியது. மேயராக பதவியேற்கும் முன்புவரை, மிகுந்த பணிவுடன் இருந்த கல்பனா, பதவியேற்ற பிறகு கட்சியினரை மதிக்காமல் செயல்பட்டதாக சொல்லப்பட்டது. அதேபோல, இவர்களது பக்கத்து வீட்டு பெண்ணை காலி செய்யச் சொல்லி குடைச்சல் கொடுத்தது, கணவர் மீது எழுந்த கமிஷன் புகார் உள்ளிட்டவை இந்த ராஜினாமாவுக்கு காரணமாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், காலியாக உள்ள திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்ப மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி மேயர்களை தேர்ந்தெடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 6 தேதியான நாளை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

 DMK candidate Selected Coimbatore Mayor election

இதனையொட்டி, அடுத்த மேயர் வேட்பாளர் யார் என்று குறித்து அமைச்சர்கள் முத்துசாமி, கே.என் நேரு ஆகியோர் இன்று (05-08-24) கோவை காளப்பட்டி சாலையில் உள்ள அரங்கில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க கவுன்சிலர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக தி.மு.கவைச் சேர்ந்த ரங்கநாயகி என்பவரை அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இவர் கோவை மாநகராட்சியின் 29வது வார்டில் இருந்து கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். 

 DMK candidate Selected Coimbatore Mayor election

அதே சமயம், கோவை மாநகராட்சி மத்திய மண்டலத் தலைவராக உள்ள மீனாலோகு கூட்டத்தில் இருந்து வெளியேறிய போது, கண்ணீர் மல்க சென்றார். மேயர் வாய்ப்பு கிடைக்கும் என மீனாலோகு எதிர்பார்த்திருந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கண்ணீர் மல்க காரில் புறப்பட்டு சென்றார். முன்னதாக, மீனாலோகுவுக்கும் முந்தைய கவுன்சிலரான கல்பனாவுக்கும் இடையே மாமன்றக் கூட்டத்திலேயே வாக்குவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.